“ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது”… சார்பட்டா பரம்பரைக்கு நடிகர் சூர்யா பாராட்டு…
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யா, பசுபதி, ஜி.எம்.சுந்தர், திஷாரா, கலையரசன், சபீர், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1970 ஆம் ஆண்டுகளில் சென்னையில் குத்துச்சண்டை பரம்பரைகள் எவ்வாறு செயல்பட்டன என்பது குறித்து காட்சிகளாக வைக்கப்பட்டன. குத்துச்சண்டை போட்டியில் இரு தரப்பினர் மோதிக் கொள்வதுடன், சமகால அரசியல் நிகழ்வுகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அவசரநிலை பிரகடனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு, எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அரசியல் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த படத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது என்றும் வாழ்த்துக்கள் என்றும் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.
