குற்றம்

சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியைகள்… சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்…

சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 3 ஆசிரியைகள், சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜராகி நேரில் விளக்கமளித்தனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 போக்சோ பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரிப்பதற்காக சிபிசிஐடி காவல் துறை திட்டமிட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளுக்கு, சிபிசிஐடி அதிகாரிகள் சென்றபோது, ஆசிரியைகள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு தப்பியோடியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியைகளின் வீட்டின் கதவுகளின் சம்மன் ஒட்டப்பட்டது.

சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து ஆசிரியைகள் தப்பியோடிய நிலையில், அவர்களை கைது செய்து விசாரிக்க வாய்ப்பிருப்பதாகவும்தகவல் வெளியானது. இந்த நிலையில், தலைமறைவான ஆசிரியைகளில் 3 பேர், நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியைகளிடமும் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

மாணவிகளுக்கு, சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தந்தது குறித்து, ஆசிரியைகளிடம் விசாரணையும் நடத்தப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சிபிசிஐடி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 5 ஆசிரியைகளில் 3 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில் 2 ஆசிரியைகள் தலைமறைவாக உள்ளனர்.