திருமணம் முடிந்ததும் மணப்பெண் நகைகளை பெண் வீட்டாரிடமே ஒப்படைத்த மணமகன்…
கேரளாவில் வரதட்சணை கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், மணமகன் ஒருவர், திருமணம் முடித்தவுடன், மணப்பெண் அணிந்திருந்த நகைகளை, பெண் வீட்டாரிடமே ஒப்படைத்துள்ளார். மணமகனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பல இளம் பெண்களின் இல்லறவு கனவு பாதியிலேயே பொய்த்து போகும் சம்பவம், பெரும் புயலைக் கிளப்பியது. வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் கேரள இளைஞர் ஒருவர், திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை, பெண் வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆலப்புழை, நூரநாடு பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாதஸ்வர இசைக் கலைஞரான இவருக்கும், ஆலப்புழையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் சுருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போதே தனக்கு வரதட்சணை வேண்டாம் என சதீஷ் கூறியிருந்தார்.
சதீஷுக்கும் – சுருதிக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண் சுருதிக்கு சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை, பெண் வீட்டாரிடமே திரும்ப கொடுத்துள்ளார். வரதட்சணை வேண்டாம் என்பதுதான் தனது விருப்பம் என்று கூறிய சதீஷின் கொள்கைக்கேற்ப, மணப்பெண் சுருதி, 2 வளையல்களை மட்டும் அணிந்துவிட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மனமகன் சதீஷின் செயலை அனைவரும் பாராட்டினர். மேலும், சமூக வலைத்தளத்திலும், சதீஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
