பாஜக எம்.எல்.ஏ.க்கள் 150 பேர் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்… மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு…
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 150 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். 16 ஆம் தேதி தமிழக பாஜக தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
ஈரோடு குமலன்கோட்டைக்கு சென்றிருந்த அண்ணாமலை, அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசினார். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கட்சியில் தனக்கு பதவி வழங்கப்பட்டதாக கூறினார். நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், வருங்காலம் என்பது தமிழகத்தில் பாஜக கட்சியின் காலமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சியின் கொள்கையைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அதிகளவு இருப்பதால், கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்றார். அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயல்படுவதுதான் என்னுடைய முதல் வேலையாக இருக்கும் என்றும் பேசினார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என கூறிய அவர், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 150 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
