தமிழ்நாடு

அரசின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை…

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளைத் தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. அரசின் அறிவிப்புக்குப் பிறகு, வணிக வளாகங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதாக, சென்னை மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் தகவல் வந்த வண்ணம் உள்ளன.

இதன் அடிப்படையில் வணிக வளாகங்களில் அரசின் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள கடைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகள், வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.