பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி கிடையாது… சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு…
இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டு கிடையாது என நுகர்வோரை எச்சரியுங்கள் என்றும், கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாலைகளில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணித்து வாகனங்களை இயக்க ஏதுவாக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் இந்த கண்ணாடிகள் அகற்றப்படுவதால், விபத்துக்கள் அதிகரிப்பதாக, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இரு சக்கர வாகனத்தில் ரியர் வியூ கண்ணாடிகள் இல்லாமல் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் ராம்குமார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இரு சக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியைக் கண்டிப்படன் அமல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பான வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
