தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தலைமையேற்று வழி நடத்துவதற்கு வயது ஒரு முக்கியமான விஷயம் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமைலை கூறினார்.
தமிழக பாஜக தலைவராக 16 ஆம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பாஜகவில் இருந்து பலருக்கு அகில இந்திய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்றார். ஒரு பக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சிக்குள் உள்ளனர் என்றும், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பாகவே, தலைவர் பொறுப்பை தான் நினைப்பதாக கூறினார். மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள் என்றும் பாஜக தனிநபரை முன்னிறுத்தும் கட்சி அல்ல என்றும் கூறினார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றத்தை அடுத்து, தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அண்ணாமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, வரும் 16 ஆம் தேதி, தமிழக பாஜக தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். தற்போது கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டிருக்கும் அண்ணாமலைக்கு, அந்தந்த பகுதி பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
