தமிழ்நாடு

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையானவர்கள் கருத்து: ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பான்மையானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின் செய்தியாளர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை கடந்த ஜூன் 10 ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. அந்த குழு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து 165 பக்க அறிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பான்மையானவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், நீட் தேர்வால் ஏற்படும் உளவியல், பொருளாதாரம், சமூகநீதி, சட்டப்பிரச்சனைகள் குறித்தும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

86 ஆயிரம் புகார்களில் பெரும்பான்மையானவர்கள் நீட் வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் அறிக்கையில் உள்ள தகவல்களை கூற முடியாது என்றார். ஆய்வறிக்கை தயாரிக்க போதுமான கால அவகாசம் இருந்தது என்றும், ஆய்வறிக்கை குறித்து அரசே முடிவெடுக்கும் என்றார்.