நீட் ஆய்வறிக்கை முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு…
நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் 10 ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. நீட் ஆய்வுக்குழு நியமனத்துக்கு தமிழக பாஜக துணை பொது செயலாளர் கரு நாகராஜன், தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் சமர்ப்பித்தார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆன்லைன் வழியாகவும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு மனு அளிக்கலாம் என்று கூறப்பட்டதை அடுத்து, நடிகர் சூர்யா, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்பட 86,342 பேர் மனுக்கள் அனுப்பியிருந்தனர்.
நீட தேர்வு பாதிப்பு குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்தவ கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த 4 முறை கூட்டம் நடைபெற்றது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு மனு அளித்தவர்களில் பெரும்பாலானோர், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், இது தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் இன்று சமர்ப்பித்தார்.
கடந்த 2006 ஆம ஆண்டு திமுக ஆட்சியின்போது, தொழிற்கல்வி நுழைவு தடை சட்டம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையிலேயே பி.இ. மற்றும் மருத்துவ சேர்க்கை வேண்டும் என்று கோரப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட தொழிற்கல்வி நுழைவு தேர்வு தடை சட்டம் மூலம் தமிழகத்தில் எந்தவொரு மேற்படிப்புக்கும் நுழைவு தேர்வு தேவையில்லை என்ற பாதுகாப்பு சட்டம் இருக்கிறது என்பதையும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ள 86,342 பேரில் பெரும்பாலானோர் நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
