தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் வேண்டும்..! இயக்குநர் சேரன் வேண்டுகோள்..
கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகளை திறக்க இந்திய அரசு தடை விதித்தது .இதையடுத்து தற்போது வரும் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது .
திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் திரைத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ ‘ஜோஜி’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
இதை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது.
இந்நிலையில் கேரள அரசின் இந்த் அறிவிப்பை இயக்குநர் சேரன் வரவேற்றதோடு தமிழ் மொழிக்கும் தனி ஓடிடி தளம் அவசியம் வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்.இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
