தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமனம்!
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் திரிபாதியின் பதவிக்காலம், வரும் 30ம் தேதியுடன்( நாளை ) முடிவடைகிறது. இந்நிலையில் டி.ஜி.பி.பதவியை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே அனுப்பியிருந்தது.
இதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. சீனியாரிட்டி அடிப்படையிலும் தகுதி அடிப்படையிலும் முதலிடத்தில் இருக்கும் சைலேந்திரபாபு, தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின .
இந்நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திர பாபு, ரயில்வே துறை டி.ஜி.பி.,யாக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர பாபு விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அதோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் “Missing Children” ஆய்வேட்டை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். இளைஞர்கள் மத்தியில் ஐபிஎஸ் பணி லட்சியத்தை உருவாக்கியதில் சைலேந்திர பாபுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக இருந்த சைலேந்திர பாபு தற்போது ரயில்வே டிஜிபி பணியில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை டிஜிபியாக நியமனம் செய்யபட்டுள்ளார். அவருக்கு இளைஞர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
