பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்..! டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வாக்குறுதி!
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், சண்டிகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியதாவது:
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இதனால், பஞ்சாபில் 77 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லாத நிலை ஏற்படும்.
மேலும், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும். இது கெஜ்ரிவாலின் வாக்குறுதி, அமரீந்தர் சிங் வாக்குறுதி இல்லை. நாங்கள் எங்களின் வாக்கை காப்பாற்றுவோம். அமரீந்தர் சிங் கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
பஞ்சாப் மாநிலத்தில் மின் உற்பத்தியில் எந்த குறைபாடும் இல்லை. இருந்தாலும் மாநிலத்தில் மணிக்கணக்கில் மின்வெட்டு நிகழ்கிறது. வீட்டில் ஒரு மின்விசிறி, ஒரு லைட் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 மின் கட்டணம் வருகிறது.இவை அனைத்துக்கும் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதுமட்டுமல்ல பழைய மின் கட்டண பாக்கியை யாருமே கட்டத் தேவையிருக்காது.
டெல்லியில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறும் மின்சாரத்தையே நாங்கள் மக்களுக்குக் கொடுக்கிறோம். இருந்தாலும் கூட அங்கு மின் தடையில்லை. மின் கட்டணமும் நாட்டிலேயே குறைந்த அளவில் இருக்கிறது. அதை சாத்தியமாக்கியது ஆம் ஆத்மி கட்சிதான். அதையே நாங்கள் பஞ்சாபிலும் செய்வோம் என கூறினார்.
