இந்தியா

“மாஸ்க் அணிய முடியாது”… ‘லூசு – சனியனே’ என போலீசாரை திட்டிய பெண்…!

இரு சக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண், அபராதம் விதிக்க முயன்ற போலீசாரை கடுமையான வார்த்தைகளால் திட்டிய சம்பவம் காரைக்காலில் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது, முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்று புதுவை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், காரைக்கால் பகுதியில் பெண் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், முகக்கவசம் இன்றி வந்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தை நிறுத்திய பெண் காவலர்கள், அவரிடம் அபராதம் விதிக்க முயன்றனர். அதற்கு அந்த பெண், எனக்கு கொரோனா வராது… முகக்கவசம் எல்லாம் அணிய முடியாது என்று அடாவடியாக பேசியுள்ளார். அபராதம் கட்டுவதற்கு நான் என்ன நோட்டு மெஷின் வெச்சுருக்கேனா… அபராதம் கட்ட என கூறியதோடு, புதுச்சேரி சுகாதார துறையில் பணியாற்றி வருகிறேன். தாம் ஏற்கனவே புதுச்சேரியில் ஒரு முறை அபராதம் கட்டினேன். காரைக்காலிலும் கட்ட வேண்டுமா என பெண் காவலர்களுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை போலீசார் ஒருவர் வீடியோ எடுத்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், லூசு – சனியனே என்று திட்டினார். ஆனாலும் பெண் காவலர்கள், அபராதம் கட்ட வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, பெண் காவலர்களிடம் அடாவடியாக பேசிய அந்த பெண் 100 ரூபாய் அபராத கட்டணம் கொடுத்துவிட்டு ரசீதை பெற்றுச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.