குடியிருக்க வீடின்றி தவிக்கும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன்…! வீடு வழங்ககோரி முதலமைச்சரிடம் மனு…
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன், வாடகை கொடுக்க வழியில்லாமல் கஷ்டத்துடன் வாழும் தங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கக்கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளர்.
1934 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்த எம்.கே.தியாகராஜபாகவதர், நடிகர், தயாரிப்பாளர், கர்நாடக இசை பாடகர் என பன்முக திறமைகளைக் கொண்டிருந்தார். 14 படங்கள் நடித்திருந்த நிலையில் 10 படங்கள் வசூலில் சாதனை படைத்தது. ஹரிதாஸ் திரைப்படம் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஓடி வசூலில் சாதனை படைத்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு, சாதகமான தீர்ப்பை பெற்றாலும், அவரது திரை வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. பிரம்மாண்ட பங்களாவில் குடியேறி, பன்னீரில் குளித்து தங்க தட்டில் உணவருந்திய எம்.கே. தியாகராஜ பாகவதர், தம் கடைசி காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கினார். தமது 49 ஆம் வயதில் 1959 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இந்த நிலையில், எம்.கே.தியாகராஜ பாகவதரின் இரண்டாவது மனைவி ராஜம்மாளின் குடும்ப போதிய வருமானம் இல்லாமல், இருக்க வீடு இல்லாமல் கடுமையான வறுமையில் உழன்று வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்துக்கு வந்திருந்த பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம், அரசு சார்பில் வீடு வழங்கக்கோரி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாத்தா எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு 2 மனைவிகள் இருந்தனர் என்றும் 2-வது மனைவி ராஜம்மாளின் மகள் அமிர்தலட்சுமி – பாஸ்கர் தம்பதியின் மகன் தான் என்றார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நானும் எங்கள் குடும்பத்தினரும் வேலை இழந்துவிட்டோம். எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டு வசதி வாரியத்தில் அரசு எங்களுக்க ஒரு வீட்டை ஒதுக்கினால் அனைவருமே அங்கேயே வசிப்போம் என்றும் எங்கள் வாழ்க்கைக்கு பேருதவியாக அமையும் என்றார். நடிகர்கள் சிவக்குமார், சூர்யா உள்ளிட்டோர் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி செய்து வருவதாக கூறினார்.
