நல்லவேளை அமைச்சர் செந்தில் பாலாஜியால் நான் தப்பித்தேன்… அமைச்சருக்கு நோபல் விருது பரிந்துரைத்த செல்லூர் ராஜூ…
மின் தடைக்கு காரணம் அணில் என்று புதிய கண்டுபிடிப்பை செய்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாக எதிர்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். மின் தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, செடி – கொடிகளால் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதில்லை என்றும் மின் கம்பிகள் மீது அணில்களால் ஓடுவதால் கம்பிகள் உரசி மின்சார துண்டிப்பு ஏற்படுவதாகவும் கூறியிருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சென்னையில், பூமிக்கு அடியில் மின்வழித்தடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அணில்கள் என்ன பூமிக்கு அடியில் ஓடுகிறதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலாக கூறியிருந்தார். நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு, பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் செந்தில் பாலாஜி என்னையும் மிஞ்சி இப்போது அணிலைகண்டுபிடித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க கூறினார். மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூவிடம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணில் விவகாரம் குறித்த கேள்விக்கு, அதற்கு நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்று கிண்டலாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தெர்மகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று திமுகவினர் கிண்டல் செய்தார்கள். இப்போது என்னையும் மிஞ்சி அணிலைக் கண்டுபிடித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. எங்கள் ஆட்சியில் அணில் எல்லா வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதுபோல, இந்த ஆட்சியில்தான் அணில் மின் கம்பியில் போகிறது என்றும், இந்த கண்டுபிடிப்பை செய்த செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக செல்லூர் ராஜூ கிண்டலாக கூறினார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு, நம்மை வைத்து அரசியல் நடப்பது தெரியாமல் வாழும் அப்பாவி அணிலுக்கும் நோபல் பரிசு தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
