எந்த வகை கொரோனாவாக இருந்தாலும் துவம்சம் செய்யும் ‘சூப்பர் வாக்சின்’
டெல்டா வகை கொரோனா, டெல்டா பிளஸ் வகை கொரோனா உள்ளிட்ட அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் ‘சூப்பர் வாக்சின்’ தடுப்பு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், பல நாடுகளில் டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல வகைகளில் உருமாற்றம் அடைந்து 2வது, 3வது அலையாக மக்களை தாக்கி வருகின்றன .
இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் டெல்டா, டெல்டா பிளஸ் வகை கொரோனாவை எந்தளவிற்கு எதிர்க்கும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள், ‘சூப்பர் வாக்சின்’ என்னும் ஹைபிரிட் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்து நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், இந்த மருந்து தடுப்பாற்றலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இம்மருந்து அடுத்தாண்டு மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .
