அரசியல்

பெண் ஊழியரை பணிக்கு வர விடாமல் தடுத்த திமுக பிரமுகர்… நான் வெச்சதுதான் சட்டம்… திமுக பிரமுகர் கொக்கரிப்பு…

தாராபுரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை பணிக்கு வரக் கூடாது என்றும், அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய திமுக பிரமுகரை கண்டித்து அனைத்து கட்சியினர் பேரணியாக சென்று புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் துர்கா தேவி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கொளத்துப்பாளையம் திமுக பேரூர் கழகசெயலாளர் துரைசாமி என்பவர், துர்காதேவியை பணிக்கு வரக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். பெண் என்றும் பாராமல் துர்காதேவியை, தகாத வார்த்தைகளால் திட்டியும், துரைசாமி அராஜக செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், திமுக செயலாளர் துரைசாமியிடம் கேட்டுள்ளனர். அதற்கு துரைசாமி, இது திமுக ஆட்சி இங்கு நான் வைத்ததுதான் சட்டம்… என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது… என்று கூறி விவசாயிகளையும், பொதுமக்களையும் மிரட்டியுள்ளார்.

திமுக செயலாளர் துரைசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அதிமுக, பாஜக, பாமகவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். மேலும், துர்காதேவியை நிரந்தர பணியாளராக மாற்றித்தர வேண்டும் என்று மனு அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், திமுக பிரமுகர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினர்.