கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி… ஒவ்வொரு மாதம் ரூ.2000 வழங்க அரசாணை வெளியீடு…
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், மாதா மாதம் 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால், தாய் – தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை கேரள அரசு கொண்டு வந்துள்ளது. கொரோனாவால் பெற்றோர் இருவரும் இறந்தால், அவர்களின் குழந்தைக்கும், ஏற்கனவே தாய் அல்லது தந்தையில் யாராவது ஒருவர் இறந்த நிலையில் மற்றொருவருக்கு கொரோனா பாதித்து இறந்திருந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவ கேரள அரசு தீர்மானித்திருந்தது.
அது தொடர்பான அரசாணையை கேரள அரசு வெளியிட்டது. கேரள சுகாதார துறை மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் குழந்தைகள் வளர்ச்சித்துறை நிதியில் இருந்து ஆதரவற்ற குழந்தைகள், அவர்களின் பாதுகாவலர் ஆகியோருக்கு ‘ஜாயின்ட் அக்கவுண்ட்’ தொடங்கப்படும் என்றும், அந்த அக்கவுண்ட்டில் மாதம் 2,000 ரூபாய் வீதம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், அந்தக் குழந்தைகளின் பெயரில் மூன்று லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை படிப்புக்கான தொகை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.
பெற்றோர், பாதுகாவலரை இழந்து ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ முதலமைச்சர் கூறியதன்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது வரை கேரளத்தில் பெற்றோரை இழந்த 74 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு இந்த அரசாணை மூலம் உதவிகள் சென்றடையும் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
