குற்றம்

பள்ளி மாணவிக்கு 4 ஆண்டுகள் பாலியல் தொல்லை… முன்னாள் ஆசிரியர் மீது போக்சோ…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… கைது நடவடிக்கைகள்… என்பது போன்ற செய்திகள் தற்போது தமிழகத்தையே உலுக்கி வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவி ஒருவருக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதிர்ச்சி செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா. திருமணமான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆரணியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜா, ஆசிரியர் பணியில் இருந்து விலகி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் இருந்து சென்ற பின்னரும், மாணவியுடனான தொடர்பினை நீட்டித்து வந்துள்ளார். மாணவியின் தாய்க்கு தெரியாமல் அவரது வீட்டுக்கு வந்து சந்தித்து பேசியுள்ளார். இது கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்திருப்பதாகவும், சில தினங்களுக்கு முன்புதான் ராஜாவிடம் தன் மகள் சிக்கியிருப்பதை அறிந்த அவரது தாய் அறிந்துள்ளார். இதையடுத்து, திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த மாணவியின் தாய், மகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் ஒன்றை அளித்தார்.

மாணவியின் தாய் அளித்த புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு எஸ்.பி. உத்தரவிட்டதை அடுத்து, முன்னாள் ஆசிரியரும், அரசு ஊழியருமான ராஜா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ராஜா தலைமறைவாகி இருப்பதால், தனிப்படை ஒன்று ஆரணியில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு விரைந்துள்ளது.