அரசியல்தமிழ்நாடு

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்தது: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதி அளித்தது ஏன் என்றும், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது என்றார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் கொரோனா பரவல் உச்சபட்சத்தில் இருக்கும்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும்போது மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என்பதுதான் திமுக தலைவராக அன்று எதிர்ப்பை தெரிவித்தார்.

தற்போது கொரோனா நோய் தாக்கம் குறையாமல் இருந்திருந்தால், மதுபான கடைகளை திறப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியிருக்க மாட்டார்கள். பாஜக அரசியலுக்காகவும், இருப்பைக் காட்டிக் கொள்ளவும் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். 27 மாவட்டங்களில் மது விற்பனை செய்தற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை மீறுவோர் அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.