அரசியல்தமிழ்நாடு

வானதி சீனிவாசன் பற்றி அவதூறு பேச்சு… காவல் துறையில் பாஜக புகார்…

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறு பரப்புவதாக கூறி கோவையைச் சேர்ந்த பாஜகவினர் இன்று போலீஸ் கமிஷர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பாஜக மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக தற்போது அவதூறு கருத்துக்கள் வெகுவாக பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கோவையைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், வானதி சீனிவாசன் குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ரவிசங்கர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகனாம்பாள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், கோவையைச் சேர்ந்த கோவை ரவிசங்கர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவிசங்கரின் இந்த பதிவை ஜெகநாதன் என்பவர் பலருக்கு பகிர்ந்துள்ளதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கீதா என்பவர், கீதா டிவி என்ற சொந்த யூடியூப் சேனலில், வானதி சீனிவாசன் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே பாஜக குறித்தும் பாஜக நிர்வாகிகள் குறித்தும் அவதூறான விமர்சனங்கள் செய்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த பாஜகவினர், போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.