மில்லர் மற்றும் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது குஜராத் அணி..!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடர்ன் காடன் மைதானத்தில் தொடரின் முதல் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது .
அதில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின .
இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர்- யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நினைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் , யாஷ் தயாள் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் சென்றார் .
பின்னர் அதிரடி மன்னன் ஜாஸ் பட்லர் உடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். முதல் பந்து முதலே அதிரடி காட்ட தொடங்கிய கேப்டன் சாம்சன். பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் சாம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் வீழ்ந்தார் .
இதையடுத்து பட்லர் உடன் படிக்கல் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்த இந்த ஜோடியை எதிரணி கேப்டன் ஹர்டிக் பாண்டியா பிரித்தார். படிக்கல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அட்டாக்கிங் பேட்ஸ்மேன் ஹெட்மயர் களமிறங்கினார். அதுவரை நிதானமாக ஆடி வந்த பட்லர் கடைசி கட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தை காட்ட தொடங்கினார். 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்புடன் குஜராத் அணி விளையாடியது .
அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சாஹா 2-வது பந்திலே ட்ரெண்ட் போல்ட் ஓவரில் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் . பின்னர் சுப்மன் கில் உடன் வேட் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தனர்.
அப்போது 35 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வேட் 35 ரன்களில் வெளியேற குஜராத் அணியின் அதிரடி ஜோடி களத்தில் ஒன்று சேர்ந்தனர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் அதிரடியாகவும் பொறுப்பாகவும் விளையாடினர். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் அணி இருந்தது .
ஆட்டத்தின் கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச முதல் பந்தில் மில்லர் சிக்சர் விளாசினார். அதை தொடர்ந்து 2-வது பந்திலும் மில்லர் சிக்சர் விளாச குஜராத் அணியின் வெற்றி உறுதியானது. 3-வது பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்ட மில்லர் குஜராத் அணியை இறுதி போட்டிக்கு அசால்ட்டாக அழைத்து சென்றார். இறுதியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
