zodoac

ஆன்மீகம்

ராசி பலன்-டிசம்பர் 1 முதல் 15 வரை… 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் 

மேஷம்:எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் சுயமுடிவைத் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் தேடிவரும். அதில் கவனம் தவறாமை முக்கியம். தலைவலி, வயிறு உபாதை, பூச்சி தொல்லை வரலாம். துர்க்கையைத் துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும்.
ரிஷபம்: முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். பணியிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். இருக்கும் பணியை விட்டுவிட்டுப் புதிதாகத் தேடுவதை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். வரவு சீராகும். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வாக்கில் நிதானம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். ஒற்றைத் தலைவலி, பற்களில் உபாதை வரலாம். ஏழுமலையானை வணங்குங்கள். ஏற்றங்கள் உறுதியாகும்.
மிதுனம்: தற்பெருமையைத் தவிர்த்தால், தடைகள் எல்லாம் தகரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் வாக்குக்கு செல்வாக்கு உயரும். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை நிலவும். அதை நிலைக்கச் செய்ய வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்க வாங்க சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அந்நிய தேச வர்த்தகத்தில் தஸ்தாவேஜுகளை பத்திரமா வையுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் மீது வீண்பழி வரலாம், கவனமாக இருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சியால் வெல்லலாம். வாகனத்தில் செல்லும்போது லாகிரி வேண்டாம். வயிறு, முதுகு, கண் உபாதைகள் வரலாம். மாருதியை வணங்குங்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்: சிந்தித்து செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பலகால இடமாற்றத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் விலகி இருங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருங்கள்.அரசு, அரசியலில் உள்ளோர் அமைதி காப்பதே நல்லது. கலைஞர்கள் படைப்பாளிகள் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாக இருங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். எலும்பு, மூட்டு, பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்டமகானை ஆராதியுங்கள். இனியவை எல்லாம் சேரும்.
சிம்மம்: சிந்தனையை சிதறவிடாமல் இருக்க வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிலும் நேரடி கவனமும் நிதானமும் அவசியம். பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். குடும்பத்தில் அமைதி நிலவும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோர் வாக்குக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். கடன்களை நேரடியாகப் பைசல் செய்வது நல்லது. செய்யும் தொழிலில் சட்டத்தை மதித்தல் முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகளில் நிதானமாக இருங்கள். கலை,படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். கண்கள்,காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். கணபதியை வணங்குங்கள். இஷ்டங்கள் ஈடேறும்.
கன்னி: வாக்கில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் துணிவைவிட பணிவுதான் நல்லது. பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாது. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்பதே ஏற்றம் தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். ரத்த பந்தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும்.அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள். ரத்தநாளம், மறைமுக உறுப்பு, அலர்ஜி உபாதைகள் வரலாம். நரசிம்மரை வணங்குங்கள். நல்லவை நடக்கும்.
துலாம்: திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டால், நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் நேரம்தவறாமை மிகமிக முக்கியம். சிலருக்கு இடமாற்றம் வந்தாலும் அதனால் பெருமைகளும் சேரும். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். அடுத்தடுத்து விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசினால், நல்லவை தொடரும். வரவு அதிகரிக்கும்போது, சேமிப்பை உயர்த்திக் கொள்வது புத்திசாலித்தனம். செய்யும் தொழிலில் சீரான லாபம் தொடரும். ஒப்பந்தங்களை நேரடியாக கவனியுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் முயற்சிகள் பலிதமாகும். பயணத்திற்கு முன் போதுமான ஓய்வு முக்கியம். எலும்புத் தேய்மானம், அஜீரணம், தூக்கமின்மை வரலாம். அனுமனை வணங்குங்கள், ஆனந்தம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: கர்வம் தவிர்த்தால், சர்வமும் நன்மையாகும் காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணம் எப்போதும் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கையும் இனிக்கும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம், சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு பதவி, பாராட்டுகள் கிட்டலாம். கலைஞர்கள் படைப்பில் முழுகவனம் செலுத்துங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். காது, மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் உபாதைகள், நரம்பு உபாதைகள் வரலாம். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
தனுசு: பொறுப்பு உணர்வுடன் பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணமும் ஏனோதானோ செயல்களும் கூடாது. பிறரை நம்பி பணியிட ரகசியங்களைப் பகிரவேண்டாம். கோப்புகளை பத்திரமாக வையுங்கள். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். வார்த்தைகளில் நிதானம் மிக முக்கியம். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். பணவரவுக்கு ஏற்ப செலவுகளும் சேர்ந்து வரும். கடன் வாங்க, கொடுக்க வேண்டாம். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். செய்யும் தொழிலில் முழு கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் தலைகனத்தை இறக்கிவிட்டு செயல்படுங்கள். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயாரை வணங்குங்கள். பெருமைகள் நிலைக்கும்.
மகரம்: நிலையான பாதையும் நிம்மதியான சூழலும் ஏற்படக்கூடிய காலகட்டம். அதே சமயம் பணியிடத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் அவசியம். பதவி, இடமாற்றங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பண வரவு சீராக இருக்கும். அதை சுப செலவாகவோ, சொத்தாகவோ சேமிப்பது நல்லது. செய்யும் தொழில் செழிப்பாகும். புதிய முதலீடு, தற்போதைக்கு வேண்டாம். அரசு, அரசியலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். கழுத்து, மூட்டு, பாதம், முதுகுத்தண்டுவட உபாதைகளை உடனே கவனியுங்கள். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
கும்பம்: தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். பிறரால் பழி வரலாம், கவனம் முக்கியம். குடும்பத்தில் குதூகல சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம். செய்யும் தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்துப் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலை,படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனை வணங்குங்கள். எண்ணங்கள் ஈடேறும்.
மீனம்: அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் கவனச்சிதறல் கூடாது. பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். புறம் பேசுவது, கேட்பது கூடவே கூடாது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் நிலவிய குழப்பம் மறையும். சுபகாரியத் தடைகள், குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். பூமியால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். அரசுக்கு உரிய வரி முதலானவற்றை தவறாமல் செலுத்துங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களைத் தவிருங்கள். கலைஞர்கள், படைப்பு ரகசியத்தைப் பகிரவேண்டாம். வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்கள். அலர்ஜி, படபடப்பு, ஜீரண உபாதைகள் வரலாம். ஏழுமலையானைக் கும்பிடுங்கள். வாழ்க்கை ஏற்றம்பெறும்.

Read More