SIR பட்டியல் இன்று வெளியாகிறது… உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?
தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது எப்படி, பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
பிகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை வெளியிடப்படுகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தவர்கள் முதலில் தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் நீக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அதற்கான காரணங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். புதிதாக சேர விரும்புவோரும் இதே படிவத்தை வழங்க வேண்டும். இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்ப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தலா 50, படிவம்-6 இருக்கும். அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஐனவரி 18 ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல் மட்டும் இல்லாது, ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்த மறுப்புகளையும் தெரிவிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாறுவதற்கு படிவம் 8ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
