முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை வருகை…
புதிய பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்தை காலை 10.30 மணிக்கு வந்தடைகிறார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பிறகு, அங்கிருந்து 10.45 மணிக்கு காரில் புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை வந்தடைகிறார். அங்கு, புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்துவிட்டு, அதன் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு காரில் செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, சுமார் ரூ.100 கோடி மதிப்பில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, புதுக்கோட்டை விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு அருந்திவிட்டு ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3 மணிக்கு காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று, மாலை 4.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் வருகையையொட்டி, புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வரின் வருகையையொட்டி அவருக்கு மாத்தூர், மண்டையூர், குளத்தூர், கீரனூர், நார்த்தாமலை, கட்டியாவயல் உள்ளிட்ட இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More