policeofficers

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

போலீஸ் அதிகாரிகள் அருண்,

ரஞ்சன் குமார் புகார் தெரிவித்த காலக் கட்டத்தில் சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி-யான அருண் இருந்தார். அவருக்குக் கீழ் தென் சென்னை காவல் கூடுதல் ஆணையராக என்.கண்ணன் இருந்தார். இவர்கள் இருவர் மீதும் புகார்கள் எழுந்ததையடுத்து, இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில், காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் புதுத் தகவலை வெளியிட்ட நிலையில், போலீஸ் அதிகாரிகள் அருண், கண்ணனைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்குப் பணம், செல்போன் உட்பட பல்வேறு உதவிகளைச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் தொழில் அதிபர் வீரமணி (84) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணி புரிந்த கணேசன் என்பவரைச் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணையின் போது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை குறி வைத்து வீரமணி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான் வீரமணியின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே வழக்குப் பதிவு செய்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சுமார் 11 மாதங்கள் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகத் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

வீடியோவில் உள்ளவர்கள் யார், பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, வழக்கை முடித்து வைக்கும்படி போக்சோ நீதிமன்றத்தை சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் அணுகியுள்ளனர். ஆனால், போலீஸார் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், தொழில்நுட்பங்கள் வளர்ந்த இந்தக் காலத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்ற நீதிபதி மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பிறகுதான் வீரமணியின் பாலியல் கொடுமை குறித்த தகவல்கள் விஸ்வரூம் எடுத்தது.சென்னையில் ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு அலுவலங்களில் நேற்று முன்தினமும், சேலத்தில் நேற்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 2025 அக்டோபர் 6-ம் தேதிதான், வீரமணி குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்ததாகப் போலீஸார் கூறினாலும், 2 ஆண்டுகளுக்கு முன்பே கடந்த 2024-ல் போலீஸில் புகார் அளித்தேன் என்று காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் நேற்றுமுன்தினம் புதுத் தகவலை வெளியிட்டார். தமிழக உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல் உயர் பயிற்சியக கூடுதல் டிஜிபி அருண், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த பணியைக், காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபி ராஜிவ் குமார் கூடுதலாகக் கவனிப்பார். இதேபோல், கோயம்புத்தூர் காவல் ஆணையரான ஐ.ஜி.கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த பணியை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூடுதலாகக் கவனிப்பார்.இவ்வாறு உள்துறை செயலர் மணிவாசன் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி மீது புகார் வந்த பிறகு, அந்த வழக்கைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல், குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை கோயம்பேடு காவல் சரக உதவி ஆணையர் யாஸ்மினையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை (வீரமணி) சென்னை காவல் துறை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது குற்றம். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல் துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு காவல் ஆணையர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read More