இபிஎஸ்ஸுக்கு 13… சி.வி.சண்முகத்துக்கு 37… அதிமுகவில் நடப்பது என்ன? – இரண்டாகப் பிரிகிறதா?
இபிஎஸ்ஸுக்கு 13… சி.வி.சண்முகத்துக்கு 37… அதிமுகவில் நடப்பது என்ன? – இரண்டாகப் பிரிகிறதா?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகி, அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்து, 47 இடங்களை மட்டுமே வென்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்த நிலையில், இந்த தோல்வி அதிமுகவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சி.வி.சண்முகம் தனியாக ஆலோசனை நடத்தியது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இபிஎஸ் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும், கூட்டணி முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிலும் தனியாக மற்றொரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.இந்த பரபரப்பு 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவில் எஸ்.பி.வேலுமணி, நன்னிலம் காமராஜ், ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி, பாலக்கோடு கே.பி.அன்பழகன், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், லீமா ரோஸ் மார்ட்டின், அமமுக எம்.எல்.ஏ. மன்னார்குடி காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இது தவிர ஒரு சிலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விட்டும் சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு சென்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆர்.பி.உதயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வேளச்சேரி அசோக், கே.பி.கந்தன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 16 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இ.பி.எஸ். தலைமையிலான கூட்டத்தில், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், கே.சி.கருப்பண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிகிறது.இபிஎஸ் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றதாகத் கூறப்படுகிறது. அதிமுகவில் மொத்தம் 82 மாவட்ட செயலாளர்களும், 47 எம்.எல்.ஏக்களும் உள்ள நிலையில், இப்போது யார் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்துள்ளார்.
