பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : தவறுசெய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – கனிமொழி எம்.பி
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தவறுசெய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிக குற்றம்சாட்டி இருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தவறுசெய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். நிச்சயம் அது கண்டனத்திற்குரியது. யாராலும் அச்செயலை ஏற்க முடியாது. தமிழக முதல்வர், நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டுவிட்டார், மேற்கொண்டு விசாரணையும் தொடர்கிறது. தவறுசெய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
