மணிப்பூர் காவல் நிலையங்களில் துப்பாக்கிகள் திருட்டு – சு.வெங்கடேசன் எம்பி
மணிப்பூர் கலவரத்தின் உண்மையை கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “மதுரையில் நாளை மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது, மாநாட்டில் சிபிஎம் பொது செயலாளர் சீத்தாராம் ஹெச்சூரி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில செயலாளர் கே.எஸ்.அழகிரி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்கிறார்கள். மத்திய அரசு அதிகார பசிக்காக மாநில அரசின் அதிகாரங்களை பறித்து வருகிறது, மத்திய அரசு வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருவதற்கு மணிப்பூர் கலவரம் உதாரணம்.
மணிப்பூர் சம்பவம் குறித்து 78 நாட்கள் பிரதமர் வாய் திறந்து பேசாமல் இருந்து இருக்கிறார், பாஜக அரசுக்கு மெஜாரிட்டி இருப்பதால் நாடாளுமன்றத்தில் அவர்கள் நினைப்பது தான் நிறைவேறும். மணிப்பூர் கலவரம் குறித்து பாஜக அரசு விவாதிக்க தயாராக இல்லை.
உண்மையை கண்டு அஞ்சுகிற அரசாக மத்திய அரசு உள்ளது, பாஜக தலைமையிலான மணிப்பூர் அரசு 8,000 துப்பாக்கிகளுக்கு புதிதாக உரிமம் வழங்கியுள்ளது. மணிப்பூர் காவல் நிலையங்களில் 1,500 துப்பாக்கிகள் திருடு போய் விட்டது என சொல்கிறார்கள். மணிப்பூர் கலவரத்துக்கு பாஜக அரசே காரணம்.
மணிப்பூர் அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மாநில உரிமையை மத்திய அரசு வெளிப்படையாக பறித்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையீட்டு வருகிறார். முதலமைச்சர் அதிகாரத்தை விட தனக்கு அதிகாரம் உள்ளது என நினைத்து ஆளுநர் செயல்படுகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
