அரசியல்தமிழ்நாடு

மதுரை எழுச்சி மாநாட்டின் இலட்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கிய நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மதுரை எழுச்சி மாநாட்டின் இலச்சினையை வெளியிட்டார் ஈபிஎஸ் . மதுரையில் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அதிமுக சார்பில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .அவர் பொறுப்பேற்ற பிறகு அதிமுகவின் முதல் செயற்குழுக் கூட்டத்தில் மதுரை மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடக்கும் அதிமுகவின் முதல் மாநாடு இது என்பதால் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமான மாநாடாக இருக்கும் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தென்மாவட்டங்களில் பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள் ,பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாகவும், அத்துடன் செல்லூர் ராஜு , ஆர்.பி . உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால் இவர்களைக் கொண்டு மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி தென் மாவட்டங்களில் தனது பலத்தை காட்ட பழனிசாமி நினைப்பதாகவும் கூறப்படுகிறது.