அரசியல்தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் -ஐ சந்திக்க திட்டம் உள்ளது..! சசிகலா பரபரப்பு பேட்டி…

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஓ. பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி மற்றும் சில முக்கிய நபர்களை சந்திக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அதில் திருத்தம் இருந்தால் அவர்கள் செய்து அனுப்புவார்கள். இதனை தொடர்ந்து இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும். அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும். ஆனால் திமுக அரசு எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்று அணுகுமுறை உள்ளது. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு எனக்கு என்ன பயம்? நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சில முக்கிய நபர்களை சந்திக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. என்றார்.