விளையாட்டு

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹூடா..! இலங்கை அணிக்கு 163 ரன்கள் இலக்கு…

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது .

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகிற 03, 05, 07 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது . இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இளம் வீரர்கள் கிஷன் மற்றும் கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக இன்னிங்சை தொடங்கிய கசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 3வது ஓவரை வீசிய மகேஷ் தீக்சனா சுப்மன் கில்லை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார்.

டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதையடுத்து களம் புகுந்த துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் அடித்திருந்தது. 3வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறினார். அவர் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அணியின் கேப்டன் பாண்ட்யா இஷன் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்நிலையில் அதிரடியாக ஆடி வந்த இஷன் கிஷன் 37 ரன்னில் ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து தீபக் ஹூடா பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி வந்த பாண்ட்யா 27 பந்தில் 29 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து அக்சர் பட்டேல் களம் இறங்கினார். இறுதி கட்டத்தில் தீபக் ஹூடா அதிரடி காட்டி சிக்சர்களை பறக்க விட்டார் .

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது. இந்திய அணி தரப்பில் இஷன் கிஷன் 37 ரன்னும், தீபக் ஹூடா 41 ரன்னும், அக்சர் பட்டேல் 31 ரன்னும் அடித்தனர். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா, தீக்சனா, டி சில்வா, கருணாரத்னே, மதுஷான்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது .

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .