இந்தியா

2 ஆண்டுகளுக்கு பின் சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம்…

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமான சேவையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு விட்டது. இருப்பினும் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான சர்வதேச விமான சேவையானது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்குகிறது. இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால சில்வா தெரிவித்திருந்தார்.

இந்தியா இலங்கையின் கூட்டு நிதியில் யாழ்ப்பாணத்தின் பலாலியில் அமைந்துள்ள விமான நிலையத்தை புரனமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டது . தற்போது ஓடு பாதையில் 25 இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.