சேற்றில் சிக்கி ஆண் குட்டி யானை உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாச்சிகொல்லி பகுதியில் நேற்று காட்டுயானைகளின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. இது தொடர்பாக அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது, அங்குள்ள நீர்நிலையில் உள்ள சேற்றில் சிக்கி குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது.
மேலும் இறந்த குட்டியின் அருகே தாய் யானை சத்தமிட்டபடி நின்றிருந்தது. அதனை வனத்துறையினர் விரட்ட முயன்றபோது, ஆக்ரோஷமடைந்த தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு கும்கி யானை வரவழைக்கப்பட்டு, தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தாய் யானை வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. இதனை அடுத்து, இறந்த குட்டியின் உடலை முதுமலை வன கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உயிரிழந்தது ஓரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது.
