5வது வெற்றியை பெறப்போவது யார்..? லக்னோ – பெங்களூரு அணிகள் இன்று மோதல்…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 31-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பாப் டூபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லக்னோ அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், டி காக், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற லக்னோ அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணியும், இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணியில் கேப்டன் பாப் டுபிளெசிஸ், மெக்ஸ்வேல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், முன்னாள் கேப்டனும் ஆன விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரையில் அந்த அணியில், ஹசரங்கா, முகமது சிராஜ், ஹேசில்வுட், ஷர்ஷால் பட்டேல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
