சென்னை அணிக்கு இரண்டாவது தோல்வி..! முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி…
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது . இந்த போட்டியில் லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் . மறுபக்கம் ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். பவர் பிளேவில் லக்னோ பவுலர்களை திக்குமுக்காட வைத்த அவர் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.
சிறப்பாக விளையாடிய அவர் 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் வந்த மொயின் அலியும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். ஆனால் 22 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவேஷ் கான் பந்துவீச்சில் வீழ்ந்தார் .
இதையடுத்து களமிறங்கிய துபே மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மீண்டும் லக்னோ பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான சவாலாக அமைந்தனர் . இருவரும் அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக அடித்து அணியின் ரன் கணக்கை உயர்த்தினார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவம் துபே 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய டோனி தான் சந்தித்த முதல் 2 பந்துகளிலே பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
கடைசி ஓவரில் அணியின் கேப்டன் ஜடேஜா தனது பங்கிற்கு பவுண்டரி அடிக்க சென்னை அணி 200 ரன்களை கடந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஹிமாலய இலக்கை நோக்கி லக்னோ அணி களத்தில் விளையாட தொடங்கியது .
லக்னோ அணியில் தொடக்க வீரராக ராகுல், டி காக் களமிறங்கினர். சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இவர்கள் அணியின் ரன் கணக்கை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். இவர்களை எப்படி அவுட் செய்வது என்று தெரியாமல் இருந்தபோது பிராவோ பந்துவீச்சில் டி காக் கொடுத்த கேட்சை மொயின் அலி தவறவிட்டு பெரிய தப்பை செய்துவிட்டார் .
லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர் ராகுல், டி காக் ஜோடியை சென்னை அணியின் பிரிட்டோரியஸ் பிரித்தார். பிரீடோரிஸ் பந்துவீச்சில் ராகுல் 40 ரன்களில் அவுட் ஆனார் .
அவரை தொடர்ந்து வந்த வந்த மணீஷ் பாண்டே 5 ரன்களில் நடையை கட்டினார். சிறப்பாக விளையாடிய டி காக் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த போது பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் எவின் லீவிஸ் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வந்த கணம் முதல் வெளிப்படுத்தினார் . சிறப்பாக விளையாடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது லக்னோ அணி பதிவு செய்தது .
