விளையாட்டு

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை : ஜெர்மனி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா அணி

புவனேஷ்வரில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது .

புவனேஷ்வரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அசுர பலம் வாய்ந்த ஜெர்மனி அணிக்கு நேர்த்தியான ஆட்டத்தால் தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி நெருக்கடி கொடுத்தது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 4 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் அர்ஜென்டினா அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது .

முன்னதாக வெண்கலப் பதக்கத்திற்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியில் தொடக்கம் முதல் அதிரடி காட்டிய பிரான்ஸ் அணி ஒரு புறம் இந்தியாவின் கோல் முயற்சிகளை முறியடித்துக் கொண்டே இருந்தது.

மறுபக்கம் அந்த அணியின் கேப்டன் டிமோத்தி க்ளெமெண்ட் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். இறுதியில் இந்திய அணி 1- 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தையும் இழந்து எந்த பதக்கமும் இல்லாமல் வெளியேறியது.