அரசியல்தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்..! நாளை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால், நாளையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல், கடந்த 15ஆம் தேதி தொடங்கி, புதன்கிழமை வரை நடைபெற்றது. இதில், தேர்தல் நடைபெற உள்ள 27 ஆயிரத்து 3 பதவிகளுக்கு 97 ஆயிரத்து 831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 ஆயிரத்து 71 பேர் மனுத் தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15 ஆயிரத்து 967 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 ஆயிரத்து 671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 122 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 321 பதவிகளுக்கு 8 ஆயிரத்து 603 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையையொட்டி வேட்புமனு அளித்தவர்களும், அரசியல் கட்சியினரும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குவிந்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தட்டப்பாறை ஊராட்சியில் பட்டியலின மக்கள் யாரும் இல்லாத நிலையில், கமலவேணி என்பவர் போலி சாதிச்சான்றிதழை அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, அவரது வேட்புமனுவை நிராகரிக்குமாறு தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை மாலை நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற சனிக்கிழமை (நாளை) இறுதி நாளாகும். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும், சுயேட்சைகள் மற்றும் கட்சி சாராத பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் ஊராட்சியில் 9-வது வார்டு, தனி வார்டாக, 2019ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பெண்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், தங்களது வார்டை பொதுப் பிரிவினருக்கான வார்டாக மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாகுடியில் உள்ள ரோஸ்மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதால், பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.