அதிமுகவின் குறைகளை காண்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் திமுக அரசு..! மக்கள் பணிகளில் நேரத்தை செலவிட வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல்
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே, திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் நேரத்தை செலவிடலாம் என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் அமைப்பு (மக்கள் சேவை மையம் மற்றும் ஷசம் அமைப்பு) சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் நடைபெற்றது. மேலும் ‘மோடி மகள் நலத்திட்ட உதவிகள்’ வழங்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மிதிவண்டிகள், தையல் மிஷின்கள், மேலும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் சிறு தொழில் தொடங்குவதற்கு உதவித்தொகை உள்ளிட்டவைகளை வானதி சீனிவாசன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதேநேரம் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை கண்டறிவதிலேயே திமுக அரசு நேரம் செலவிடாமல் ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளிலும் நேரத்தை செலவிடலாம் என்று தெரிவித்தார் .
