அரசியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு… அதிமுகவினர் ரகளை…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாக 1.20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கோவை, சென்னை உள்பட 53 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது- கோவையில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டு முன்பு அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினரை கட்டுப்படுத்த, குனியமுத்தூர் போலீசார் கொண்டு வந்த இரும்பு தடுப்பபை, அவர்கள் கைப்பற்றி தூக்கி சென்றனர். இரும்பு தடுப்பு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசார் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இன்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், கோவை அதிமுக கட்சி நிர்வாகிகள், எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையவர்கள், அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.பி.வேலுமணி வீட்டு முன்பு அமர்ந்து அதிமுகவினர் திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.