“உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற பாடுபடுங்கள்”… திமுகவினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்…
உள்ளாட்சி தேர்தலில் திமுக நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றும் திமுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 9 மாவட்ட திமுக செயலாளர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
கூட்டத்தின்போது, உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவிகித வெற்றிபெற திமுகவினர் பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களிடையே திமுகவுக்குள்ள நல்ல பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒத்துழைத்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
