தமிழ்நாடு

திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (87) உடல்நல குறைவால் இன்று காலமானார்.

1934 ஆம் ஆண்டு பிறந்த திண்டிவனம் ராமமூர்த்தி, 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார். சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் திண்டிவனம் ராமமூர்த்தி இருந்துள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், தனிக்கட்சியை ஆரம்பித்தார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசின் தமிழக தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக திண்டிவனம் ராமமூர்த்தி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவு தமிழக அரசியலுக்கு பேரிழப்பு என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டவர் திண்டிவனம் ராமமூர்த்தி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.