அரசியல்தமிழ்நாடு

கனிம வளங்கள் கேரளாவுக்கு கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும்… தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்…

தமிழ்நாட்டின் கனிம வளங்களை கேரளாவுக்கு கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், வளக் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதானி குழுமத்தால் கேரளாவில் கட்டப்பட்டு வரும் விழிஞம் சர்வதேச துறைமுக திட்டத்திற்கு தமிழக மலைகளில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட பாறைகளைப் போக்குவரத்து தடையின்றி கொண்டு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசின் செயல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவின் தேவைகளுக்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து பாறைகளை எடுத்துச் செல்வதில் தமிழகத்தில் உள்ள சில மாவட்ட ஆட்சியர்களால் போக்குவரத்து சிக்கல் நேர்வதால், அதை சரிசெய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு, ஆளும் திமுக அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாது ஆழ்ந்த அமைதியைக் கடைப்பிடிப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் மலைகளைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அம்மாநில அரசு, தமிழகத்தில் மட்டும் மலைகளைத் தகர்த்து கனிமவளக் கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முனைப்போடு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என கூறி கேரளத்திலுள்ள குவாரிகளைப் பயன்படுத்த அனுமதி மறுத்து, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அம்மாநில அரசு, தமிழகத்தின் வளங்களை மட்டும் வரம்பற்று சுரண்டித் தீர்ப்பது எவ்வகையில் ஏற்புடையதாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திலுள்ள பாறைகளை உடைத்து, கனிம வளங்களை அள்ளிக்கொண்டு செல்வதால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதா? இங்கு சூழலியல் சமநிலைக் கெட்டுப்போகாதா? அதனை எப்படி தமிழக மக்களால் அனுமதிக்க முடியும்? மேற்குத்தொடர்ச்சி மலையையே மெல்ல மெல்லத் தகர்த்து கேரளாவிற்குக் கனிம வளங்களைக் கடத்தி சென்றால் அதனை எவ்வாறு ஏற்க முடியும்? அக்கொடுஞ்செயலை எப்படி அனுமதிக்க முடியும்? கடவுளின் தேசம் என தனது நிலத்தை வர்ணித்து, தனது மாநிலத்தில் நிலவளம், நீர்வளம், மலைவளம் என எவற்றையும் பாதுகாத்து, எவ்விதச் சுரண்டலுக்கும் பலிகொடுக்காத வகையில் நிலவியல் கோட்பாட்டை முன்வைக்கும் கேரள அரசு, தமிழகத்தில் கட்டற்ற வளக்கொள்ளையில் ஈடுபட முனைவது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

மருத்துவ கழிவுகளையும், பிற கழிவுகளையும்கூட தன் மாநிலத்திற்குள் கொட்டாது, அதனை தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்டி, தமிழகத்தைக் குப்பைத்தொட்டி போலப் பயன்படுத்த முனையும் நயவஞ்சக கேரள அரசு, தமிழகத்தின் மலை வளங்களை தங்களது மாநிலத்தேவைக்காக அழித்தொழிப்பது மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

அதிமுக ஆட்சிக்கு முற்றிலும் மாற்றெனக் கூறி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த திமுக அரசு, மக்களின் போராட்டங்களுக்குப் பிறகும் வளவேட்டையைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்றும் இனியும் இது தொடருமானால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.