பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி: தமிழக அரசு
18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஐசிஎம்ஆர் எந்த வழிகாட்டு விதிமுறைகளையும் வழங்கவில்லை என்றும் அவ்வாறு விதிமுறைகள் வழங்கும்போது பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தக்கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்கள பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய துறை பணியாளர்கள், தொழில் நிறுவன ஊழியர்கள் போன்றோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களுக்கு என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவது தொடர்பாக ஐசிஎம்ஆர் எந்த வழிகாட்டு விதிமுறைகளையும் வழங்கவில்லை என்றும், அவ்வாறு விதிமுறைகள் வழங்கம்போது பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
