உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில் இருந்து விலகமாட்டேன்: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்
தனது உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில் இருந்து விலக மாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் தோல்வி அடைந்தார். கட்சியினரின் உள்ளடி வேலைகளால்தான் தோல்வி அடைந்ததாக கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகி, மீண்டும் தனது தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். மாஃபா மற்றும் சி.எல். மனிதவள நிறுவனத்தின் பொறுப்புகளை தனது மனைவி மற்றும் பிறரிடம் ஒப்படைத்திருந்த நிலையில், மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.
மீண்டும் தொழிலை கவனிக்க முடிவெடுத்துள்ளதாகவும், இதற்காக தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொணடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மாஃபா பாண்டியராஜன், அரசியலைவிட்டு ஒதுங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உள்ளாட்சி தேர்தலில ஆவடி மாநகராட்சி சேர்மன் பதவியை அதிமுக பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் ரீதியாக தனக்கு ஒரு நிறுவனத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதை தான் ஐந்து வருடங்களுக்கு கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவிலிருந்து விலகமாட்டேன் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
