கடைகள், கோயில்கள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது: ஓ.பன்னீர்செல்வம்
சென்னையில் 9 இடங்களில் கடைகள், சில வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் கட்ட பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா தொற்று 2 ஆயிரத்தை நெருங்குகிறது. தொற்று பரவல் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மிக பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். மேலும் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை 100 சதவிகிதம் உறுதி செய்து 3-வது அலையில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.
