மகளின் காதலனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…
மகளின் காதலை ஏற்காத பெற்றோர், அவரது காதலனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் – தீபா தம்பதியினர். இவர்களுக்கு கௌசல்யா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது பெமினாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு கௌசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், கௌசல்யா பெற்றோரின் எதிர்ப்பை மீறி முகம்மது பெமினாஸ் உடன் காதலைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌசல்யாவின் பெற்றோர், முகம்மது பெமினாஸ் வீட்டிற்குச் சென்று, மகளைக் காதலிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு, பெமினாஸ், கௌசல்யாவைத்தான் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த விஜயகுமார், தீபா தாங்கள் எடுத்து வந்திருந்த அரிவாளால், முகம்மது பெமினாசை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த பெமினாசை, அவரது பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பெமினாஸ்-ன் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார், தீபா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
