சர்ச்சை பேச்சு விவகாரம்… பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி…
பிரதமர், மத்திய அமைச்சர், திமுகவினர் மற்றும் இந்து மதம் குறித்தும் சர்ச்சைகுரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனுவை குழித்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசும்போது, திமுக நாங்கள் போட்ட பிச்சை என்றம் கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றும் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது என்றார். தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களையும் பாதிரியார் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், ஜார்ஜ் பொன்னையா மீது இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தான் கைது செய்யப்படுவதை அறிந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தலைமறைவானார். அவரை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில் மதுரை, கொட்டாம்பட்டியில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவும், ஸ்டீபனும், குழித்துறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தனர். அவர்களது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
