உலகம்

சானிடைசரால் சிறுமியின் கண்விழிப்படலம் பாதிப்பு…

பீய்ச்சி அடித்த சானிடைசரால் சிறுமி ஒருவரின் கண்விழிப்படலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அபுதாபியில் வசிக்கும் 4 வயது சிறுமி, பெற்றோருடன், வணிக வளாக பகுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு காலால் இயக்கப்படும் சானிடைசர் இயந்திரத்தை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சானிடைசர் பீய்ச்சப்பட்டு, சிறுமியின் கண்ணில் விழுந்துள்ளது.

சானிடைசர் கண்ணில் பட்டதால், சிறுமி கடும் எரிச்சல் காரணமாக துடிதுடித்துப்போயுள்ளார். அவரது பெற்றோர், சிறுமியின் கண்ணில் தண்ணீர்விட்டு சுத்தம் செய்தனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமியின் கார்னியா எனப்படும் கருவிரிப்படலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சானிடைசரில் உள்ள ஆல்கஹால் மற்றும் ரசாயனங்கள் காரணமாக சிறுமியின் கண் புண்ணாகி இருந்தது. தற்போது ஓரளவு பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரால் குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில், சிறுவர்கள் சானிடைசர் பயன்படுத்தும்போது, பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறுவர்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவ்வாறு கண்களில் சானிடைசர் பட்டவுடன் கண்களை நீரில் கழுவிய பின் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.