நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி… விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்…
விவசாயிகளுக்கு ஆதவாக நாடாளுமன்ற வளாகம் அருகே டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தினம்தோறும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனுமதி பெற்று போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென நாடாளுமன்ற வளாகம் அருகே டிராக்டர் ஓட்டி வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்.

ராகுல் காந்தியுடன் பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் டிராக்டரில் அமர்ந்துள்ளனர். மேலும் கட்சியின் ஆதரவாளர்கள், பதாகைகள் ஏந்தி வாகனத்தை சுற்றியுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயம் நாடாளுமன்றத்திற்கு கொணடு செல்வதாக கூறிய ராகுல் காந்தி, விவசாயிகளின் போராட்டத்துக்கு போதிய அளவு கவனம் அளிக்காததால்தான், டிராக்டர் ஓட்டி வந்துள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
